வரலாற்றில் சிறந்த கொள்கை விளக்க உரை : தமிழ் தலைமைகள் ஜனாதிபதியுடன் கைகோர்த்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும்!

0
200

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையானது அவர் இந்த நாடு தொடர்பில் வைத்துள்ள பரந்தப்பட்ட அபிப்பிராயம், இன, மத, சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் தொலைநோக்கு இலக்கை வெற்றிக்கொள்வதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வரலாற்றில் ஜனாதிபதிகள் ஆற்றிய கொள்கை விளக்க உரைகளில் மிகவும் சிறந்ததொரு உரையாக இது அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

“இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள சமூக, அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்த நாட்டின் ஜனாதிபதிகளாக தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு ஜனாதிபதியும் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாகவுள்ள காரணிகளை உரிய வகையில் இனங்காணாமைதான். நாட்டின் வளரச்சிக்கு பிரதான தடையாக உள்ளது இனப்பிரச்சினை என்பதை உணர்ந்த ஒரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான்.

கடந்தகால ஜனாதிபதிகளின் கொள்கை விளக்க உரைகளில் எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை வெளியிடப்படவில்லை. ஆனால், ஜனாதிபதி இந்த சம்பிரதாயங்களை மீறிய ஒருவராக உள்ளதுடன் நாட்டின் உண்மையான பிரச்சினைகளை சரிசெய்வதன் ஊடாகவே அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாக நாம் மிளிர முடியும் என்பதை உணர்ந்தவராகவுள்ளார்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் ஊடாகவே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். ஆகவே, தமிழ், முஸ்லிம் தலைகள் கடந்தகால சம்பிரதாயப்பூர்வ அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து நவீன யுகத்திற்கான அரசியல் மாற்றங்களை உணர்ந்து ஜனாதிபதியுடன் கைகோர்த்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முன்வர வேண்டும்.

மலையக மக்கள்மீது ஜனாதிபதி கொண்டுள்ள கரிசனை தொடர்பில் அவரது கொள்கை விளக்க உரை தெளிவுப்படுத்துகிறது. ஜனாதிபதியுடன் இணைந்து எம்மால் முடிந்த பணிகள் அனைத்தையும் மலையக மக்களுக்கு உறுதியாக செய்வோம்” என்றும் எஸ்.ஆனந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here