நாளாந்தம் கொழும்பு நோக்கி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் சுமார் 7,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரின் வாகன தரிப்பிடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர்உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சில வாகன தரிப்பிடங்களில் பணிபுரியும் மூன்றாம் தரப்பினரும் இவ்வாறு சட்டவிரோதமான செயலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளாந்தம் கொழும்பு நோக்கி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் சுமார் 7,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், கொழும்பு மாநகரசபை விலைமானுக்கோரல் அடிப்படையில் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் அறவிடும் பணியினை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.ஒவ்வொரு வாகன தரிப்பிடத்தில் வசூலிக்கப்படும் தொகை தரித்து நிற்கும் நேரத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.
அத்துடன், வாகனம் தரித்திருக்கும் நேரத்தைக் காட்டும் பற்றுச்சீட்டினை வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வாகனம் நிறுத்தப்படும் நேரம் மற்றும் பணத்தினை மீதப்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தமது விருப்பத்திற்கேற்ப கட்டணத்தினை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையை அண்மித்த வாகன தரிப்பிடம், நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடம், பொரளை மயான சுற்றுவட்டத்தில் உள்ள வாகன தரிப்பிடம், காசல் வீதி பெண்கள் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வாகன தரிப்பிடம் மற்றும் காலி வீதியில் உள்ள வாகன தரிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு பணம் வசூலிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் வசூலிக்கும் ஊழியர்களை அடையாளம் காண்பதற்கு அந்தந்த தனியார் நிறுவனங்களினால் சிவப்பு சீருடை வழங்கப்பட்டுள்ள போதும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.இந்த சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பு மாநகர சபை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமது அதிகாரத்திற்குட்பட்ட எந்தவொரு வீதிக்கு அருகாமையிலும் வாகனங்களை நிறுத்தும் மக்களிடம் பணம் அறவிடுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் பிரதான நகரங்களில் தானியக்க கட்டண அறவீட்டு முறையுடன் கூடிய வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டன.இருப்பினும், அவை தற்போது செயலிழந்து காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது.