விக்ரம் நடிக்கவுள்ள படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம். அந்தப் படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு படமும் இயக்காமல் இருக்கிறார் ராம்குமார். இடையே சிம்பு நடிக்கும் படத்தின் பூஜை எல்லாம் போடப்பட்டாலும், அப்படம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது.
தற்போது சிம்பு படத்துக்கு முன்பு வேறொரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்கும் போது, அதில் நாயகனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக கூறுகிறார்கள்.
விக்ரம் – ராம்குமார் கூட்டணி படத்தை அருண் விஸ்வா தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் இறுதிகட்ட கதை விவாதம், பேச்சுவார்த்தை அனைத்தும் முடிவடைந்துவிட்டால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் என்கிறார்கள். அருண் விஸ்வா தயாரிப்பில் விக்ரம் – மடோன் அஸ்வின் கூட்டணி படம் அறிவிக்கப்பட்டது. அதன் கதை இறுதியாக காரணத்தினால், மடோன் அஸ்வினுக்கு பதிலாக ராம்குமார் அப்படத்தினை இயக்க ஒப்பந்தமாக உள்ளார்.