இந்திய அரசியலுக்கும் முழுமையாக நுழையாத விஜயின் போலியான தேர்தல் வாக்குறுதிக்கு பதிலளிப்பதற்காக கச்சத்தீவு சென்ற ஜனாதிபதிக்கு சீனாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டுக்கு செல்ல நேரமில்லை என்பது வேடிக்கையானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹூமான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “சீனாவின் தலைமையில் ஓகஸ்ட் 31 ஆம் திகதியிலிருந்தி செப்டம்பர் 1ஆம் திகதி வரையில் உலக நாடுகள் பங்கேற்புடன் மாநாடொன்று நடந்தது. 26 நாடுகள் அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான்,இந்தியா,நேபாளம் உள்ளிட்ட இலங்கையை அண்டிய பல நாடுகளும் அதில் கலந்துகொண்டன்.
1999 இலிருந்து வருடாந்தம் இந்த மாநாடு நடக்கிறது. ஆனால் அந்த மாநாட்டில் இலங்கை பங்கேற்கவில்லை. ஜனாதிபதியின் வேலைப்பளு அதிகம் என்பதால் அதில் கலந்துகொள்ளவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ காரணம் கூறியிருந்தார். ஆனால் ஜனாதிபதிக்கு அன்றைய தினத்தில் கச்சத்தீவு சென்றதை தவிர வேறு எந்த வேலையும் இருந்ததாக எமக்கு தெரியவில்லை.
எனவே இவ்வாறு உலக நாடுகள் பங்கேற்கும் முக்கிய மாநாட்டில் இலங்கை சார்பில் எவரும் கலந்துகொள்ளாமல் இருந்ததால் இலங்கைக்கு உலக அளவில் கிடைக்கக்கூடிய எதிர்கால சலுகைகளை இல்லாமல் செய்வதாகவே அமையும். ஏனெனில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இவ்வாறான விடயங்களை காண முடிகிறது.
வௌிநாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இதில் பங்கேற்கவில்லை என்று சில செய்திகள் வௌியாகியுள்ளன. அதன்படி அமெரிக்காவின் ட்ரம்ப் நிருவாகத்துடன் நெருக்கமாக இருப்பதாலேயே இந்த சீனாவில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அரசாங்கம் பங்கேற்கவில்லை. இது மிகத் தவறான முடிவும்.
இலங்கையில் இதுவரையில் எந்த அரசாங்கம் இருந்தாலும் அனைத்து நாடுகளுடனும் சமமான உறவுகளையே பேணி வந்துள்ளன. அமெரிக்கா,சீனா,ரஸ்யா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் ஒரே வகையிலான இராஜதந்திர உறவுகளே பேணப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வரும் முன்பு அமெரிக்காவின் செயற்பாடுகளை விமர்சித்தவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக செயற்படுவதை காண முடிகிறது.
மறுமுனையில் இன்னும் இந்திய அரசியலுக்குள் முழுமையாக நுழையாத நடிகர் விஜயின் கருத்துக்கு எதிர்ப்பை வௌிக்காட்டும் நோக்கில் கச்சத்தீவுக்கு ஜனாதிபதிபதி சென்றிருந்தார். தமிழ் நாட்டில் மிகப் பெரிய ஆளுமைகள் இருந்தனர். குறிப்பாக எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா,கருணாநிதி உள்ளிட்ட பலரும் கச்சத்தீவு பற்றி பேசியுள்ளனர். இருந்த போதிலும் கச்சதீவு பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது.
விஜய் மக்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறாக கவர்ச்சி பேச்சுக்களை பேசுகிறார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தேர்தல் காலங்களில் இதுபோலவே பேசினார். தன்னால் செய்ய முடியாத பல வாக்குறுதிகளை தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வழங்கியது போலவே இன்று விஜய் மக்கள் வாக்குக்காக பல வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்.” என்று அவர் மேலும் கூறினார்.