விதாதா வள நிலையங்களை மறுசீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன!

0
66

விதாதா வள நிலையங்களை மறுசீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவிருப்பதாக விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன அவர்கள் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மூன்று முக்கிய தொழில்நுட்ப அடைகாப்பகங்களை (Technology Incubation Centre) நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அத்துடன் நாடு முழுவதும் உள்ள விதாதா வள நிலையங்களில் 25 சிறிய தொழில்நுட்ப அடைகாப்பகங்கள் (Technology Incubation Centre) அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடிய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர், விதாதா வள நிலையங்களை மறுசீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விதாதா அதிகாரிகளின் வினைத்திறனை அதிகரிக்கவும்,  அவர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதில் இவர்களின் பணி சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லையென குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த நிலைமைய மாற்றும் நோக்கிலேயே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். விதாதா அதிகாரிகள் ஊடாகப் பாடசாலை மட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபல்யப்படுத்தவிருப்பதாகவும், கிராம மட்டங்களில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை விதாதா வள நிலையங்கள் ஊடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு கைத்தொழில்களுக்குக் காணப்படும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினரையும் விதாதா அதிகாரிகளையும் உள்ளடக்கிய குழுக்களை அமைப்பது பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், யானை – மனிதன் மோதலுக்குத் தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். ஏனைய மிருகங்களால் விவசாயப் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்குத் தொழில்நுட்ப அமைச்சின் தலையீட்டைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here