அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்காகவே நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக சதி செய்வதாக நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்.
அரிசி, சீனி, பால்மா வகைகள், சீமெந்து ,எரிவாயு போன்றனவற்றுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்தத் தட்டுப்பாட்டினைத் தொடர்ந்து இந்த பொருட்களுக்கான விலைகளும் திடீரென அதிகரிக்கப்பட்டு வருவதையும் அதனை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் பால்மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன. குறிப்பாக ஒரு கிலோ பால்மா 200 ரூபாவால் அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த இரண்டு மாத காலமாக பால்மா வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பிள்ளைகளுக்கு சத்தான பாலைக் கொடுப்பதற்கு பெற்றோர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் சிறுவர்களுக்கு மந்தபோஷணை ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பசும் பால் உற்பத்தியும் திருப்திகரமானதாக இல்லாத காரணத்தினால் பால்மா வகைகளையே நாட வேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சதோச போன்ற நிறுவனங்களுக்கு முன்பதாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் சதோச நிறுவனத்திற்கு உள்ளே சென்ற பிறகு தாம் கொள்வனவு செய்ய வந்த அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெருந்தோட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு பொருட்களின் விலைகளும் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் பொருளாதார ரீதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மக்கள் எதிர்நோக்குகின்ற இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற மலையக பிரதிநிதிகள் எதனையும் பேசாது மௌனிகளாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை ஏற்றம் என்பன தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நாட்டு மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.