நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு துறைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடுபர்களுக்கு உரம் மற்றும் மருந்துகள் கிடைக்காததன் காரணமாக விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.
நாட்டுக்கு தேவையான மரக்கறிகளில் பெரும் பாலான பகுதியினை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளே வழங்கி வருகின்றனர்.தற்போது ஏற்பட்டுள்ள உரம் மற்றும் விவசாயத்திற்குரிய மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பல விவசாயக்குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு உரம் மற்றும் மருந்து வகைகள் உரிய நேரத்தில் கிடைக்காததன் காரணமாக அதிக விலை கொடுத்து இவற்றினை பெற வேண்டியிருப்பதனாலும் இவர்கள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஒரு சில கடைகளில் ஒரு மூட்டை உரம் 13 ஆயிரம் தொடக்கம் 18 வரை விற்கப்படுவதனால் தங்களுக்கு தேவையான உரத்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும்,அதிக விலை கொடுத்து உரத்தினை மருந்தினையும் வாங்கி உற்பத்தியில் ஈடுபட்டாலும் அவற்றினை நட்டத்திலேயே கொடுக்க வேண்டி ஏற்படுவதனால் எதிர்காலத்தில் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் சுமார் விவரம் தெரிந்த நாள் முதல் கிட்டதட்ட 30,40 வருட காலமாக இந்த விவசாயத்தினை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம்.எங்கள் குடும்பங்களை காப்பாற்றுவதற்கும் எங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்கும் இந்த விவசாயம் தான் கைகொடுத்துள்ளன.
ஆனால் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் என்றுமில்லாதவாறு பாதிக்கப்பட்டுள்ளோம.; எங்களது தங்க நகைகளை அடகு வைத்துதான் நாங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.ஆனால் இன்று விவசாயத்தில் விளைச்சளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.காரணம் உரம் மருந்து ஆகியவற்றிக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.இவை ஒரு சில வர்த்தக நிலையங்களில் காணப்பட்டாலும் அவை அதிக விலைக்கே விற்கப்படுகின்றன.
இதனால் எங்களுக்கு அதனை கொள்வனவு செய்து விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலையே உள்ளன. மருந்து மற்றும் உரம் இல்லாததன் காரணமாக பீடைகளின் தாக்கங்களும் அதிகரித்துள்ளன. இதனால் உள்ள பயிர்களும் விணாகும் நிலை உருவாகியுள்ளன.
விவசாய நிலங்கள் தற்போது இரசாய உரத்திற்கு பழகியிருப்பதனால் அதனை உடனடியாக இயற்கை உரத்தினால் சீர் செய்ய முடியாது இயற்கை உரத்தினை பயன்படுத்தினாலும் போதியளவு விளைச்சளை பெற முடியாத நிலையே காணப்படுகின்றன.
அத்தோடு போதியளவு இயற்கை உரத்தினை செய்து கொள்ளவோ பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலையில் நாங்கள் எவ்வாறு இந்த தொழிலினை கொண்டு நடத்துவது என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? எனவே இதற்குரிய உரிய தீர்வினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.