வெங்காய இறக்குமதி வரி : உள்நாட்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

0
17

இறக்குமதி வரி விதிப்பால் உள்நாட்டு விவசாயிகள் விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து அம்பாறை (Ampara) மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

நேற்று (8.10.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே விஜித ஹேரத் (Vijitha Herath) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்களில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வாறான நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றின் இறக்குமதி அதிகரித்தால், உள்நாட்டு விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்.

எனவே, உருளைக்கிழங்கு இறக்குமதிக்கான கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவாக இருந்த வரியை 10 ரூபாவினாலும், வெங்காயத்திற்கான 10 ரூபாக இருந்த வரியை 20 ரூபாவினால் அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது பயிர்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here