கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெதமுல்ல தோட்ட பிரிவிவுக்குட்பட்ட லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் 23.04.2018 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.மண்சரிவுக்கு இழக்காகும் இத்தோட்டத்தின் தொழிலாளர்கள் பலர் தமக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டி அமைக்க கோரிக்கைகள் விடுத்து 23.04.2018 அன்று மதியம் தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தோட்ட மக்கள் கறுப்பு கொடிகளையும், பதாதைகளையும் ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
2015ம் ஆண்டு இத்தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 7 பேர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் அன்று முதல் மண்சரிவுக்கு உயிர் அச்சத்துடன் வாழும் இத்தோட்ட மக்கள் பாதுகாப்பான இடம் ஒன்றில் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரி மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மண்சரிவு விபத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு அத்தோட்டத்தின் 5ம் இலக்க தேயிலை மலையில் வீடுகள் கட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் இத்தோட்டத்தில் மேலும் 105 குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் கட்டப்பட வேண்டும் என தோட்ட நிர்வாகம் மற்றும் குறித்த அமைச்சியையும் தொழிலாளர்கள் வழியுறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் புதிதாக அத்தோட்டத்தை நிர்வாகம் செய்யும் தம்ரோ பெருந்தோட்ட கம்பனி அத்தோட்டத்தின் 5ம் இலக்க மலையில் புதிய வீடுகளை அமைப்பதற்கு தடைவிதித்துள்ளது. காரணம் குறித்த மலையில் தேயிலை மீள் பயிர்ச்செய்கை செய்ய இருப்பதாக காரணம் காட்டியுள்ளது.
ஆனால் 5ம் இலக்க மலை தனி வீடுகள் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம் என சுட்டிக்காட்டியுள்ள தொழிலாளர்கள் நிர்வாகம் தற்பொழுது வழங்கவிருப்பதாக சொல்லப்படும் இடத்தில் தமக்கு வீடுகள் அமைத்து தர வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து கடந்த 7 நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள மேற்படி தோட்ட தொழிலாளர்கள் 23.04.2018 அன்று இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)