வெனிசுலா இடைக்கால அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்!

0
25

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் பயங்கரவாதி என்றும், வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இதனிடையே, எண்ணெய் வளத்திற்காக வெனிசுலா குறி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.

அவர் தனது பதவிக்காலத்தின் முக்கிய நடவடிக்கையாக, நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும் சட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதன்படி, வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் தனியார் முதலீட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் வெனிசுலா நாட்டின் எண்ணெய் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சியுடன் பேசினோம். வரும் ஆண்டுகளில் இந்தியா-வெனிசுலா உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து துறைகளிலும் எங்கள் இருதரப்பு கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here