நோர்வூட் பிரதேச சபையில் டிக்கோயா பிரதேச வட்டாரமொன்றின் வெற்றிப்பெற்ற வேட்பாளர் தனது பதவியைப் பணத்துக்காக விட்டுக்கொடுக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலானது அந்த வேட்பாளருக்கு வாக்களித்த மக்களின் முகத்துக்குக் கரியைப் பூசுவதற்கு ஒப்பானதாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா அமைப்பாளர் உருமன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா பணிமனையில் இடம் பெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா மாவட்டத்தலைவர் செல்வராஜ் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தக்கூட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட டிக்கோயா பிரதேச தோட்டத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சுப்பிரமணியம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
வனராஜா வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட எனக்கு 2500 வாக்குகளுக்கு மேல் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த வாக்குகளை வழங்கிய வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மக்களுக்கு எமது தலைமைகள் செய்த சேவையைக் கருத்திற்கொண்டு மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். எனினும் அப்பட்டமான பொய்களை மக்களிடம் எடுத்துக்கூறியும் கையூட்டல்களை வழங்கியும் வெற்றிப்பெற்ற வேட்பாளர் தனது பதவியை விற்பனை செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையக மக்களை ஒரு சாரார் எவ்வாறெல்லாம் எமாற்றுகின்றார்கள் என்பதை தேர்தலுக்குப் பிறகு மலையகம் புரிந்து விட்டது. வாக்களித்த மக்களுக்குத் தூரோகமிழைக்கின்றவர்களுக்கு மக்கள் விரைவில் தகுந்த கண்டனை வழங்குவர்.
க.கிஷாந்தன்