வெற்றிமாறனின் ‘மனுஷி’ படத்தை மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்!

0
14

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை இன்று (ஜூன் 11) மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாக, சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் வெற்றி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “தணிக்கைச் சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், தணிக்கை வாரியம் என்னுடைய தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை. தணிக்கை வாரிய உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துகளை எனக்கு தெரிவிக்கவில்லை. பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருக்கிறேன். படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய எனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டுமே அந்த காட்சிகளை மாற்றி அமைக்க முடியும். எனவே, மனுதாரர்களுடன் திரைப்படத்தை பார்த்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்களை சுட்டிக் காட்ட அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில், “மனுஷி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்று மனுதாரர், அந்த காட்சிகளை நீக்கினால் என்ன வகையான சான்று வழங்கப்படும் என்ற முடிவை மறு ஆய்வு குழு தெரிவிக்கும். காட்சிகளை நீக்க மறுத்தால், சென்சார் போர்டு முடிவுக்கு அறிக்கை அனுப்பப்படும்,” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மறு ஆய்வு குழு படத்தை பார்த்து, அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்தபின் வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here