வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்த முடிவு சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை ஏற்படுத்தும் என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
SLMA வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறு எனவும், 2021 முதல் மருத்துவ கஞ்சாவுக்கான உலகளாவிய தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கலாம், பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், மனநோய், போதைப் பழக்கம், நுரையீரல் நோய்கள் மற்றும் வீதி விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக இதனால் எதிர்பார்க்கப்படும் ஆதாயங்கள் நாட்டின் கடன் மற்றும் வெளிநாட்டு பணவனுப்பலுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு எனவும் SLMA எச்சரிக்கிறது.
இந்த முடிவு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கலாம் என்றாலும், இலங்கையர்களுக்கு கடுமையான துயரத்தை ஏற்படுத்தும் என SLMA தெரிவித்துள்ளது.