அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இம்மாதம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீக்குவதாக சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் நேற்று(01) அறிவித்துள்ளது.
அகதி அந்தஸ்து அல்லது அரசியல் புகலிடம் பெற்று வெளிநாடு ஒன்றில் வாழும் இலங்கையருக்கு கடவுச்சீட்டு வழங்கக் கூடாதென 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அகதி அந்தஸ்திலோ, புகலிடம் கோரியோ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் உரிமைகளை இந்த அறிவுறுத்தல்கள் மீறுவதாக இருக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் பிரஜைகளின் உரிமைகளை நிலைநாட்ட உறுதி பூண்டிருப்பதாக அவர்களுடைய சுதந்திரமான பிரயாண வசதிக்காக இது வரையில் அமுலிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளின் விளைவாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு வரவும் இங்கு முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் அவர்கள் இலங்கை திரும்பி நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்ய வழியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.