வெளி மாவட்டங்களில் தொழில் புரிகின்ற மலையக இளைஞர் யுவதிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் ப. கல்யாணகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் தொழில் புரிகின்ற பெருந்தோட்ட பகுதி இளைஞர் யுவதிகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். தமது சொந்த மாவட்டங்களில் இருந்து வெளியேறி வெளி மாவட்டங்களில் தொழில் புரிகின்ற பெருந்தோட்ட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பொதிகள் மற்றும் கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை.
எனவே விசேட வேலைத் திட்டம் ஒன்றின் ஊடாக வெளி மாவட்டங்களில் தொழில் புரிகின்ற பெருந்தோட்ட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.