மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா படுகைகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹா ஓயா படுகையின் சில துணை ஆறுகள் இதுவரை குறிப்பிடத்தக்க மழையைப் பெற்றுள்ளதால், மழை நிலைமை மற்றும் மஹா ஓயா படுகையிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் பராமரிக்கப்படும் அளவிடும் கருவிகளின் நீர் மட்டங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், அடுத்த 36 மணி நேரத்திற்குள் அலவ்வ, திவுலப்பிட்டி, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மஹா ஓயா தாழ்நில பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள், மேற்கூறிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதி வீதிகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.