நைட்டி வழக்கமாக பெண்கள் தானே போடுவார்கள்? ஆனால் கேரளத்தில் ஒரு ஆண் எப்போதுமே நைட்டி மட்டும் தான் போடுவார் என்றால் நம்பமுடிகிறதா? அதிலும் அவர் நைட்டி போடுவதற்கான காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.
கொல்லம் மாவட்டம், கடைக்கல் பகுதியில் போய் மேக்ஸி மாமா என கேட்டால் பச்சைக்குழந்தை கூட பாதை காட்டுகிறது. மேக்ஸி என்றால் நைட்டி மாமா என அர்த்தம். அந்த ஏரியாவில் சாலையோர உணவகம் நடத்துகிறார் மேக்ஸி மாமா. அவரது இயற்பெயர் எகியா. ஒருமுறை அவர் கடைப்பக்கமாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் வந்துள்ளார். அதை கவனிக்காத எகியா வழக்கம்போல் பணிகளில் இருந்தார். அவரைக் கூப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரன் வந்து நிக்கிறேன். வேட்டியை மரியாதையாக இறக்கிவிடத் தெரியாதா? என கன்னத்தில் ஒரு அறை விட்டிருக்கிறார்.
உடனே விறு, விறுவென வீட்டுக்குப் போன எகியா, தன் வேட்டியை கழட்டி எரிந்துவிட்டு அதற்கு பதிலாக நைட்டியைப் போட்டுக்கொண்டு வந்தார். நைட்டி போடுவதால் அதை வேட்டி போல் மடித்து விடவேண்டியதில்லை. அப்புறம் போலீஸைப் பார்த்ததும் அவிழ்த்துவிடவும் வேண்டியது இல்லையல்லவா? என்கிறார் இந்த நைட்டி மாமா. 18 வருசமாக நைட்டி மட்டுமே உடுத்தி வருகிறார் எகியா.
இதேபோல் இவரது சாலையோர உணவகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்த காசில் 23 ஆயிரம் வைத்திருந்தார். பணத்தாழ் ஒழிப்பில் இவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னதும் அதை மாற்ற க்யூவில் போய் நின்றார். அப்போது 2 நாள்களாகியும் இவரால் மாற்ற முடியவில்லை. இதனால் ஒருகட்டத்தில் தலைசுற்றி மயங்கி விழுந்தார். இதனால் என் பணத்தை செல்லாது என அறிவித்தவர் ஆட்சியில் இருக்கும் வரை பாதி மீசை, பாதி தலை முடியோடுதான் இருப்பேன் என சபதம் போட்டு பாதி மீசையோடும் வலம் வருகிறார் இந்த மேக்ஸி மாமா!