ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்!

0
4

அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட 9 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதிருந்தே தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம், கூட்டணி, வாக்குறுதி, திட்டங்கள் என மக்களை நோக்கி செல்கின்றன.

இந்தநிலையில், ஆளும் கட்சியான திமுக, மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் சரியாக மக்களிடம் சென்று சேரவும்.

மக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும். ஆட்சியும் அதன் செயல்பாடுகளும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என திமுக அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்ததோடு, ஆளுக்கொரு துறைகளையும் பிரித்துக் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பின்னணி

1966 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். கால்நடை மருத்துவத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டத்தை முடித்த ராதாகிருஷ்ணன், ஆட்சிப்பணி மீது இருந்த ஆர்வத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுதி 1992ல் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர் தூத்துக்குடி துணை ஆட்சியராக தனது பணியை தொடங்கினார். நிதித்துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளில் பணியாற்றியவர், 2001 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

பென்சிசு கொலைக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுத்து மக்கள் நம்பிக்கையை பெற்றவரை, தஞ்சாவூர் ஆட்சியராக நியமித்தது தமிழக அரசு.

சுனாமி வந்த போது தனது ஒருங்கிணைப்பு பணிகளால் மக்களே கொண்டாடும் அளவுக்கு செயலாற்றினார் ராதாகிருஷ்ணன்.

நிவாரணம் சரியாக போய்ச் சேர அவர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டைப் பெற்றன. அப்போதுதான் சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுமியை தத்தெடுத்துக் கொண்டார் ராதாகிருஷ்ணன்.

இதன்பின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சி பொறுப்பில் இருந்தவர், 2012ல் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்த ராதாகிருஷ்ணன், ஒரே பொறுப்பில் அதிக ஆண்டுகள் வேலை பார்த்த செயலாளராக இருந்தார்.

இப்படி பல அனுபவங்களை கொண்டவரை சென்னையின் ஆணையராகவும், போக்குவரத்து துறை செயலாளராகவும், கொரோனா சமயத்தில் ஆலோசகராகவும் நியமித்து பயன்படுத்திக் கொண்டார் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் பின்னணி

வட மாநிலத்தவராக இருந்தாலும், தமிழில் சிறப்பாக பேசக்கூடியவர் தான் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ். 1968 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ககன்தீப் சிங் பேடி, மின்னணுவியல் துறையில் பட்டம் முடித்தார்.

பின்னர் கல்லூரி ஒன்றில் மூன்று ஆண்டுகள் விரிவுரையாளராக பணியாற்றியவர், ரயில்வே துறையில் சேர்ந்து பணியாற்றினார்.

1993 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். பயிற்சி காலத்தில் சிறந்த மாணவருக்கான விருதை வென்ற ககன்தீப் தமிழ்நாடு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சில மாவட்டங்களில் துணையாட்சியராக பணியாற்றியவருக்கு மதுரை மாநகராட்சி பணி தேடி வந்தது.

மதுரை ரிங்ரோடு பணிகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகியவற்றை சிறப்பாக முடித்தவர் கன்னியாகுமரி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பிளாஸ்டிக்கிற்கு எதிராக அவர் மேற்கொண்ட விழிப்புணர்வு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். மிகச் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான பல விஷயங்களை குறுகிய காலத்தில் செய்து முடித்தார்.

யுனிசெப் தூதுவராக இருந்த பில் கிளின்டனோடு ஒரு நாள் முழுக்க பயணம் மேற்கொண்டார் ககன்தீப். இவரின் நடவடிக்கைகளை கவனித்த கிளின்டன் அவரை மனமுவந்து பாராட்டினார்.

இதன்பிறகு தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி துறை, சென்னை மெட்ரோ குடிநீர், கால்நடை பராமரிப்பு துறை, வருவாய் துறை என பல பணிகளை மேற்கொண்டார்.

கொரோனா காலத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பேடி, சிறப்பான பணியாற்றி இறப்பு விகிதங்களை குறைக்க உதவினார்.

இப்படி பல துறைகளில் அனுபவம் கொண்ட ககன்தீப் சிங்கை அரசு செய்தி தொடர்பாளராக நியமித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அமுதா ஐஏஎஸ் பின்னணி

அமுதா ஐஏஎஸ் அதிகாரியை யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள். கலைஞர் இறந்த போது, முன்னாள் முதல்வர் என்ற முறையில் இறுதிச் சடங்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு பெண் அதிகாரியை நியமிக்கிறது.

லட்சக்கணக்கில் தொண்டர்கள், தொலைக்காட்சிகளில் லைவ் கவரேஜ், கண்ணீரோடு நிற்கும் குடும்பம், மறைமுகமாக ஒரு பிரஷர் என பல அழுத்தம் இருந்தாலும், அனைத்தையும் சரியாக திட்டமிட்டார்.

ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை ஒவ்வொருவரையும் சரியாக அழைத்து வந்து இறுதிச் சடங்கை செய்ய வைத்தார். கடைசியில் தானும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி குழியில் போட்டு மொத்த திமுகவையும் உணர்ச்சி வசப்பட வைத்தார். அந்த அதிகாரிதான் அமுதா ஐஏஎஸ்.

1970 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார் அமுதா. விடுதலை போராட்ட வீரர்களான தாத்தா பாட்டியின் வளர்ப்பில் தைரியமான பெண்ணாக வளர்ந்து வந்தார். வேளாண் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

ஐஏஎஸ் தேர்வில் வென்று 1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஈரோடு மாவட்ட துணையாட்சியராக பணியாற்றியபோது வனப்பகுதிக்குள் இருந்த மக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்து கூறி, அவர்களை தவறான வழியில் செல்வதிலிருந்து மீட்டார்.

செங்கல்பட்டு துணையாட்சியராக இருந்தபோது அங்கு நடந்த மணல் கடத்தலை தனி ஆளாக சென்று எதிர்த்தார். இது முதல்வரின் கவனத்துக்கு உடனடியாக சென்றது. பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி ஆட்சியராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

சுமார் 14 துறைகளில் பல ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும், சென்னை வெள்ளத்தின் போது அமுதா மேற்கொண்ட பணிகள் முக்கியமானவை.

குறிப்பாக வெள்ளத்துக்கு பின் நாட்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களின் லிஸ்டை எடுத்து எந்த பயமும் இன்றி அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கினார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேராக சென்று அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்தார்.

திடீரென மத்திய அரசுக்கு சென்று பிரதமர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அதோடு ஆட்சிப்பணி அதிகாரிகளின் பயிற்சி மையமான முசோரி லால்பகதூர் சாஸ்திரி மையத்தில் பொது நிர்வாக பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில் தான் மீண்டும் திமுக ஆட்சி வந்தபோது மாநில பணிக்கு வந்து பணியாற்றி வருகிறார். இடையில் உள்துறை செயலாளராக கூட பணியாற்றினார். தற்போது இவரையும் அரசு செய்தி தொடர்பாளராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.

தீரஜ் குமார் ஐஏஎஸ் பின்னணி

பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்து வளர்ந்த தீரஜ் குமார், பிடெக் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி. 1993 தமிழ்நாடு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான தீரஜ், தனது ஐஏஎஸ் பயிற்சியை ஐஎம்எம் பெங்களூருவில் முடித்தார்.

இதை அடுத்து 1994 முதல் 1996 வரை கோவை இணையாட்சியராக பதவி வகித்திருந்த தீரஜ், 1996 முதல் 1998 வரை நில வருவாய் மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்ந்த பொறுப்புகளையும் வகித்து வந்தார்.

பின்னர் துணையாட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார் தீரஜ் குமார். 2006ல் தொழில்துறை கூடுதல் செயலாளர், 2009ல் வணிகவரி மற்றும் தொழில்துறை ஆணையர் என பல பதவிகளை வகித்தார்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு பணிக்கு சென்றார் தீரஜ். 2017ல் மீண்டும் தமிழ்நாடு மாநில அரசு பணிக்கு திரும்பினார் தீரஜ்.

அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகள் மேம்பாடு, வறுமையை ஒழித்து வாழ்வியலை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், சிறு தொழில் தொடங்க நிதி உதவிகளை அணுகும் வாய்ப்பு என உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் கொண்டுவரப்பட்டது.

வாழ்ந்து காட்டுவோம் என்ற அந்த திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார் தீரஜ். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சர்ச்சை எழ, அமுதா ஐஏஎஸ்க்கு பதிலாக உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் தீரஜ் குமார்.

தற்போது இவரும் அரசு செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இப்படி தங்களது அரசில் முக்கிய பதவிகளை வகித்த நான்கு மூத்த அதிகாரிகளை தற்போது அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்த நால்வரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் சென்று சேர, செய்தியாளர்களை சந்தித்து பேசுவார்கள். தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், திமுக அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நன்றி ஒருவன் செய்தி இ​ணையத்தளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here