ஸ்டொக்கம் தோட்டத்தில் 2 வீடுகள் சேதம் – 12 பேர் பாதிப்பு.

0
202

மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நிலையில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் 13ம் இலக்க கொண்ட நெடுங்குடியிருப்பில் சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது.

20 வீடுகளை கொண்ட தொடர் வீடுகளில் இந்த சம்பவம் 27.05.2021 அன்று காலை இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு வீடுகளை சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் இப்பகுதி கிராமசேவகர் ஊடாக நோர்வூட் பொலிஸார் மற்றும் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட ஆலய மண்டபத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

அத்தோடு, இந்த நெடுங்குடியிருப்பில் உள்ள ஏனைய 5 வீடுகளிலும் வெடிப்புகள் காணப்படுவதன் காரணமாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாக குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here