ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படுவார்கள்

0
219

காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இடையே வேறுபாடு எதுவும் இல்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களையும் கொன்று காஸாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளார்.

‘காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இடையே வேறுபாடு எதுவும் இல்லை. உலகம் ஐ.எஸ். அமைப்பை அழித்தது போல் நாமும் அழிப்போம். அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களும் இறக்க வேண்டும்’ என இஸ்ரேல் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் கூறினார்.

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் பிரதமர் நெதன்யாகு இவ்வாறு தெரிவித்தார்.

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தொடங்கிய போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று ஐக்கிய அரசு நம்புகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான பென்னி காண்ட்ஸ் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் பங்கேற்புடன் பிரதமர் நெதன்யாகு இந்த புதிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்துள்ளார்.

பாலஸ்தீனத்துக்கு எதிரான போர் குற்றங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, காஸா மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் காஸா நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.வான் தாக்குதலுக்கு பயந்து காஸா நகரில் உள்ள மக்கள் தங்கள்உடமைகளுடன், ஐ.நா. பள்ளிகள் உட்பட பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர்.

பேக்கரிகள் மற்றும் பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைபோதுகிறது. பேக்கரிகளில் எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாததால், அவைகள் திறந்த சில மணி நேரங்களிலேயே மூடப்படுகின்றன.

காஸா பகுதியில் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு விட்டன. இதனால் காஸா நகரில்உள்ள மக்களால் அப்பகுதியைவிட்டு வெளியேற முடியவில்லை. எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாமல் குண்டுகள் வீசப்படுகின்றன.

இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடிபாடுகளில் சிக்கி இறக்கின்றனர். வான் தாக்குதலில் காஸாவில் சுமார் 1,200 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் குறித்து போனில் ஆலோசனை நடத்தினர். ஈரான், சவுதி இடையே கடந்த 7 ஆண்டுகளாக விரோதம் நிலவிவந்தது.

இதை போக்கி மீண்டும் உறவுகள் ஏற்பட சீனா முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த சவுதி அரேபியா, ஈரான் ஆகியவை கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டன.இந்நிலையில், நேற்று இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக போனில் பேசினர். அப்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான போர் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்துவது தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் பேசுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பதாக சவுதி இளவரசர் தெரிவித்தார்.அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை சவுதி அரேபியா நிராகரிக்கிறது என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here