காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, தனது நிபந்தனைகளை ஹமாஸும் ஏற்க வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளாததன் விளைவுகள் குறித்து ஹமாஸுக்கு முன்பே எச்சரித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை தனது கடைசி எச்சரிக்கை என்றும், எதிர்காலத்தில் இனி எந்த எச்சரிக்கைகளையும் வெளியிட மாட்டேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் 21 மாதங்களாக நீடித்துள்ள போரில் காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர் எனவும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.