நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த நிலையில் உயிரிழந்த டயகம சிறுமி ஜூட் ஹிஸாலினிக்கு நீதி கோரி, வலப்பனை பிரதேச சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, இன்று காலை போராட்டம் ஒன்றை காலை இராகலை நகரில் முன்னெடுத்தனர்.
அதேநேரத்தில், வலப்பனை பிரதேச சபையின் ஜூலை மாதம் ஆரம்ப பகுதியில் ஒத்திவைக்கப்பட்டிருந்த சபை அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது.
சபை தவிசாளர் ஆனந்த ஹெத்தேட்டிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சபை அமர்வை பெருமாள் ராஜேந்திரன் தலைமை தாங்கி நடத்தினார்.
இதன்போது சபை அமர்வை இரண்டு மணித்தியாலயங்களுக்கு ஒத்திவைத்து இந்த நீதி கோரிய அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, இராகலை நகர் முருகன் கோவிலில் இருந்து சபை உறுப்பினர்கள், வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தி அணியாக வருகை தந்து அமைதி போராட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு