ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

0
125

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது இளைஞர் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர், போதைப்பொருளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அடியாக இருந்து வந்துள்ளார். அதனால் வீட்டில் பணம் கேட்பது மற்றும் திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்ப பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

நேற்று காலையில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டுவிட்டு வீட்டுக்கு வந்த இளைஞர் நெஞ்சைப் பொத்தியவாறு நிலத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் உயிரிழப்பு அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டமையினால் ஏற்பட்டது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில் 2 வாரங்களில் மற்றொரு இளைஞனும் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதனால் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தாவிடின் இளவயதினரின் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

கிராம மட்ட அமைப்புக்கள் பொலிஸாருடன் இணைந்து போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here