நாட்டில் கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் வேலைத் திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

0
129

இந்த நாட்டில் கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் வேலைத் திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். நாட்டின் 10142 மொத்த பாடசாலைகளில் மூவாயிரம் பாடசாலைகள் தமிழ் பாடசாலைகளாகும்.ஆகையால் கல்விக்கு வழங்கப்படும் சலுகையில் நூற்றுக்கு 30வீதம் தமிழுக்கு தேவை என்பதில் சமூகத்தின் நலன் கருதி இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படுகிறேன் என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசியல் வாழ்வின் 30வது ஆண்டு மற்றும் லண்டன் நாடு வழங்கிய கலாநிதி பட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி பாராட்டு விழாவை ம.ம.முன்னணி அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் 05.08.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய நிகழ்வையொட்டி உலகமே என்னை பாராட்டினாலும் என்னை வாழவைக்கும் மலையக சகோதர சகோதரிகளின் பாராட்டை பெரிதாக நினைக்கின்றேன்.

பாராட்டு நிகழ்வு எனது வாழ்வோடு சம்பந்தப்பட்டுள்ளதால் என்னைபற்றி சிலவற்றை கூறவேண்டும் என்ற அவர் தனது கல்வியை நுவரெலியா மற்றும் கொழும்பு சென்று பெற்றிக் மற்றும் சென்னை ஜோசப் கல்லூரிகளில் கற்று முடிந்த பின் எனது தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுப்பட்டு வந்தேன் என்றார்.

பின் 1987 இல் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்துடன் இ.தொ.காவில் அறிமுகமாகி நுவரெலியா பிரதேச சபை தலைவராகவும் பின் மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராகவும் நமது சமூகத்தின் சேவையை முன்னெடுத்தேன்.

இவ்வாறு என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இவ்வாறு பாராட்டுகளை பெற என்னை உலகுக்கு அறிமுகம் செய்த பெற்றோர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் 3021 ஆசிரியர் நியமனம் பெறப்பட்டது.

பல போட்டிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பாடசாலை கட்டிடங்கள் கல்வி அதிகாரிகள் என பல உரிமைகளை பெற்றுக்கொள்ள இ.தொ.கா சக்தியாக அமைந்திருந்தது என்றும் தெரிவித்தார்.

சந்திரிகா அம்மையார் ஐனாதிபதியாக இருக்கும் போது அவரின் செயலாளர் ஊடாக நமது சமூகத்துக்கான கல்விக்காக பல உரிமைகள் பெறப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

பின் 2010இல் இ.தொ.கா வில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இ.தொ.காவை விட்டு வெளியேறி மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து அரசியல் தலைவராக இப்போதுள்ளேன் என்ற அவர் தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவராகவும் செயற்படுவதுடன் நாட்டின் பிரதமர் கடந்த 2015 இல் தேர்தலில் வெற்றிபெற்ற பின் தமிழ்மக்களின் கல்வி நிலையை உயர்த்த இராஜாங்க கல்வி அமைச்சரை வழங்கினார். இன்று த.மு.கூட்டயினூடாக பல்வேறு சேவைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக செய்துவரும் நிலையில் மலையக கல்வி வளர்ச்சி மட்டுமின்றி வடக்கு கிழக்கு தென்மாகாண தமிழ் கல்வி வளர்ச்சிக்கும் பாடுபடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மலையகத்தில் நுவரெலியாவில் தேசிய கல்லூரி அமைத்தல் தோட்டங்களில் தரம்13 வரை கட்டாய கல்விக்கு பாடசாலைகளை அமைத்தல் யப்பான் உதவியுடன் மொடன் பாடசாலை அமைத்தல் என பல வேலை திட்டங்கள் முன்னெடுத்து வரும் அதேவேளையில் கல்விக்கென அடுத்த வாரம் 500 மில்லியனுக்கான வேலைத்திட்டம் ஒன்றும் அறிமுகம் செய்ய அமைச்சு தயாராகி வருவதாகவும் செரிவித்தார்.

தோட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்வியை உயர்த்தினால் சமூகம் உயர்வகையும் அதேவேளையில் வசதிகள் அற்ற நிலையில் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள மாலை 6மணிமுதல் இரவு 9 மணிவரை டி.வி.பார்ப்பது ரேடியோவை சத்தமாக கேட்பதை தவிர்க்க பெற்றோர்கள் திட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here