ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர வேண்டும் – ஆர்.ராஜாராம் அறைகூவல்

0
184

” ஒருமித்த நோக்கில் ஓரணியில் திரண்டு அதிபர், ஆசிரியர்கள் போராடியதால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனவே, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து, ஒன்றுபட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் அறைகூவல் விடுத்துள்ளார்.

அட்டனில் இன்று (12.11.2021) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு சுமார் 24 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் அதிபர், ஆசிரியர்கள் சார் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டன. அதிபர், ஆசிரியர்கள் ஓரணியில் திரண்டனர். இலக்கை நோக்கி பயணிக்க ஒருமித்து குரல் எழுப்பினர். அடக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை தகர்த்தெறிந்து துணிகரமாக போராடினர். அதன் விளையாக இன்று சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிபர், ஆசிரயர்களின் போராட்டத்திலிருந்து நாம் படிப்பினையை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர வேண்டும். எனவே, கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும். ஊதிய உரிமைக்காகவும், தொழில் பாதுகாப்புக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட வேண்டும். அப்போது தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஊதிய உயர்வின் பலன் அவர்களுக்கு கிட்டவில்லை. முன்னார் 25 நாட்கள் வேலை என்றால் தற்போது வாரம் 3 நாட்கள் என மாதம் 12 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது. அதாவது முன்னரை விடவும் குறைந்த சம்பளமே கிடைக்கின்றது.

உரம் மற்றும் சீரற்ற காலநிலையால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவ்விரு தரப்புகளுக்கும் பட்ஜட்டில் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். இதுவரையில் யோசனைகள் உள்வாங்கப்படாத பட்சத்தில் திருத்தத்தின்போது அவை உள்வாங்கப்பட வேண்டும்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here