10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 56 வீடுகளுக்குரிய நிர்மாண பணி 12 ஆம் திகதி இடம்பெறும். 2026 இல் மேலும் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். 2027 ஆகும்போது இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்ட பணியை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்டப்பகுதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையான குடும்பங்கள் லயன்களில் வாழ்கின்றன. மலையக மக்களுக்கென காணி இல்லை, வீடு இல்லை, முகவரிகூட இல்லை. இவற்றை நாம் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டினோம். தற்போது பிரச்சினைகளைப் பற்றி பேசும் உரிமை எமக்கு கிடையாது.
ஏனெனில் தற்போது தீர்வை வழங்க வேண்டிய தரப்பில் நாம் இருக்கின்றோம். அதனால் தீர்வை வழங்க முயற்சிக்கின்றோம்.
2 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ள நிலையில் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, மாற்று யோசனை பற்றி ஆராயப்படுகின்றது. காணியை வழங்கினால் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்குரிய இயலுமை சிலருக்கு உள்ளது. இப்பிரச்சினை அடுத்த தலைமுறைக்கு செல்லகூடாது. பல ஆட்சிகள் வரும்வரை காத்திருக்கவும் கூடாது. எம்மால் முடிந்தளவுக்கு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
காணி உரிமையென்பது அரசுக்கானது, தோட்ட நிறுவனத்துக்கானது எனக் கூறி காணி வழங்குவதில் பயன் இல்லை. அவ்வாறு வழங்கினால் மீண்டும் லயன் சிஸ்டத்துக்கே சென்றுவிடும். காணி உரிமை , உரித்து சகிதம் வழங்கப்படும். 12 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறும் நிகழ்வின்போது ஏற்கனவே வீடுகளைப் பெற்றவர்களுக்கு காணி உரித்துக்குரிய பத்திரம் வழங்கப்படுகின்றது. எனவே, காணி உரிமையை வழங்குவோம்.
பெருந்தோட்டப்பகுதிகளில் எல்.ஆர்.சி. இடங்களே உள்ளன. எல்.ஆர்.சி. இடங்கள் மக்களுக்கு வழங்கப்படும் நடைமுறைகள் உள்ளன. சிலவேளை குத்தகை அடிப்படையில் வழங்கப்படுகின்றது. சிலவேளை மானியமாக வழங்கப்படுகின்றது. ஆனால் மக்களுக்கே உரிமையாகும் வகையில்தான் (12 ஆம் திகதி) காணி உரிமை வழங்கப்படுகின்றது.
“சின்னக்கர” (அசல்) என்ற வசனம் மாறுபட்டாலும் மக்களுக்கே இடத்தின் உரிமை இருக்கும்.
வழங்கப்படும் காணியை , வீட்டை மற்றைய நபருக்கு விற்பனை செய்துவிட்டு மீண்டும் லயத்துக்கு சென்றால் அதுவும் பிரச்சினையாகும். குறிப்பாக மகாவலி பிரதேசத்தில் காணி வழங்கும்போது, பயனாளி ஒருவர் தனது பிள்ளைக்கு கைமாற்றலாம். காலம் சென்ற பிறகே அதனை விற்க முடியும். ஆனால் 12 ஆம் திகதி வழங்கப்படும் உரித்தை பயனாளி அனுபவிக்கலாம். கைமாற்ற நினைத்தால் மாற்றலாம். எனினும், ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி ஆராயப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.