1000 ரூபாய் சம்பளம் என்பது ஒரு மாயை

0
221

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு என்ற மாயையை ஏற்படுத்திய நாள் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிமைகள் போல வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியால் தலவாக்கலையில் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டு மௌனித்து போயுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை தொடர்ந்து தோட்டங்களில் ஆயிரம் பிரச்சனைகள் இன்று தலை தூக்கியுள்ளன. தோட்ட நிர்வாகங்களினால்
தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் நிலைமை அதிகரித்துள்ளன. தோட்ட அதிகாரிகளால் பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் சிறை சென்று திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் பெருந்தோட்ட கம்பெனிகளும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களை
வஞ்சிக்கின்றன. தலவாக்கலை கட்டுகல தோட்டத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாத காலமாக வேதனமின்றி வாடுகின்றனர்.

இந்தத் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்காகவும் இன்று நாங்கள் போராடுகின்றோம்.

அரசாங்கத்தின் ஒழுங்கற்ற பொருளாதார கொள்கையால்
அத்தியாவசியப் பொருட்களுக்கு விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் உட்பட வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.

ஆசிரியர்களும் அதிபர்களும் தமது வேதன பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அராஜக அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். எமது போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here