நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் – 19 ஐத் தடுப்பதற்காக, தடுப்பூசிக்கு மக்களை தயார்படுத்தும் திட்டத்தை விரைவாக தயாரிப்பதற்கு மாவட்ட செயலாளர் நந்தன கலபட, சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலக ஆச்சர்ய மண்டபத்தில் நடைபெற்ற கோவிட் 19 தடுப்பதற்கான மாவட்டக் குழுவில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மாவட்ட செயலாளர் எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுபோன்ற ஒரு திட்டம் அமுல்படுத்தப்படுகின்றபொழுது தடுப்பூசியை வழங்கும் போது நெரிசலைக் குறைக்கும் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தைத் தடுக்கும் என்று மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் 491 கிராம அலுவலர் பிரிவுகளில் 30 வயதுக்கு மேற்பட்ட 384,081 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முதலில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
இதற்காக 50 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் கிராம மட்டத்தில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்படுவதோடு இதில் கிராம அலுவலர் அபிவிருத்தி அதிகாரிகள் சமுர்தி அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் உதவி கோரப்படும் என்றும் அவர் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வது தொடர்பான தகவல்களை சேகரிப்பது தடுப்பூசி திட்டத்திற்கு முன் செய்யப்படும் என்று டாக்டர் மதுரா செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.
.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மனதுங்க கூடுதல் மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர பிரதேச செயலாளர்கள் மற்றும் நுவரெலியா டி.ஐ.ஜி மற்றும் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அமுல் படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது எனவும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.