கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவர் தீ விபத்துச் சம்பவமொன்றில் துணிச்சலாக செயற்பட்டதை அடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
வடக்கு வான்கூவரில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அதிகாலையில் கட்டடத்தில் தீ பற்றிக் கொண்டதை அறிந்து கொண்ட சிறுமி உடனடியாக வெளியேறாது, அண்டை வீடுகளுக்கு தீ விபத்து பற்றி தெரியப்படுத்தியுள்ளார்.
மூன்றாம் மாடியில் குடியிருந்த சக குடியிருப்பாளர்களின் கதவுகளை தட்டியும், சத்தமிட்டும் தீ விபத்து பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 12 வயதான ரெசாயி என்ற சிறுமியே இவ்வாறு துணிச்சலாக அனைவரையும் தீ விபத்திலிருந்து மீட்பதற்கு உதவியுள்ளார்.
ரெசாயி குடும்பத்தினரின் இந்த செயற்பாட்டை தீயணைப்புப் படையினரும் அயலவர்களும் பாராட்டியுள்ளனர். இந்த தீ விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிபத்தின் போது சமயோசிதமாக செயற்பட்டு அனைவருக்கும் தகவல் வழங்கிய இந்த குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.