மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது நீரேந்து பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்ட உயர்ந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தினங்களாக நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக லக்ஸபான மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்த்தேக்கங்களின் கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரசபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றுமில்லாத அளவுக்கு குறைவடைந்தன இதனால் நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்தன. இந்நிலை தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதனால் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதே வேளை காசல்ரி மற்றும் மவுசாக்கலை பகுதிகளிலும் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால் அந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகின்றன.
கடந்த காலங்களில் நீர்வற்றியதன் காரணமாக தென் பட்ட பழய கட்டங்கள் மற்றும் சிறிய தீவுகள் ஆகியன தற்போது படிப்படியாக மூழ்கி வருகின்றன.
மலைவாஞ்ஞன்