விமர்சன அரசியல் தேவையில்லை – எம்.பி. ராமேஷ்வரன் தெரிவிப்பு

0
160

” 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி நடைபோட்டதுபோல, இம்முறையும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடும். ஏனெனில் அன்றும் இன்றும் என்றும் மக்கள் சக்தி எம்பக்கமே.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆரம்பக் கட்ட பிரச்சார கூட்டம் இறை வழிபாடுகளுடன் நேற்றைய தினம் (14.02.2023) கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், உப தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் தெரிவிக்கையில்,

” 2018 ஆம் ஆண்டில் புதிய முறைமையின்கீழ் தான் உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது எமக்கு ஆட்சிபலம்கூட இருக்கவில்லை. எனினும், எமது பெருந்தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா, எம்மையெல்லாம் தைரியமாக வழிநடத்தினார். திட்டங்களை வகுத்தார். தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டோம். வெற்றிபெற்றோம். சபைகளில் தவிசாளர் பதவிகளைக்கூட எம்மவர்களே வகிக்கின்றனர்.

அன்று எம்முடன் இருந்த ‘ஆறுமுக சாமி’ என்ற மாபெரும் சக்தி இன்று எம்முன் இல்லை. இருந்தாலும் எங்கள் இதய தெய்வமாக அவர் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார். அதேபோல அமைச்சரும், காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் எங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருந்து வருகின்றார்.

எனவே, இம்முறையும் வெற்றி நிச்சயம். மாபெரும் மக்கள் சக்தி காங்கிரஸ் பக்கமே உள்ளது. இங்கு விமர்சன அரசியல் தேவையில்லை. நாம் எமது திட்டங்களை முன்வைத்தே பிரச்சாரம் செய்கின்றோம். மக்களும் அதனையே விரும்புகின்றனர். ” – என்றார்.

 

அந்துவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here