15 ஆயிரம் சமூர்த்தி பயனாளர்களின் நலன் கருதி மன்ராசி நகரில் சமூர்த்தி வங்கி புத்தாண்டில் திறந்து வைப்பு.

0
145

மலர்ந்துள்ள புத்தாண்டில் 15 ஆயிரம் சமூர்த்தி பயனாளர்களின் நலன் கருதி மன்ராசி நகரில் புதிய சமூர்த்தி வங்கி ஒன்று இன்று (01) முதலாம் திகதி லிந்துலை அக்கரபத்தனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
டயகம அக்கரபத்தனை பிரதேசங்களை உள்ளடக்கிய 57 பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட மக்களும், 09 கொலனியைச் சேர்ந்த சுமார் 09 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 15572 பேர் கடந்த காலங்களில் சமூர்த்தி பயன்களை பெற்றுக்கொள்வதற்கு லிந்துலை நகருக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது இதனால் முதியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர் பல முதியவர்கள் அதிக பணம் போக்குவரத்துக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் பலர் வங்கியில் பெறும் பணத்தினை தொலைத்துவிட்டு அவதிபட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை கருத்தில் கொண்டு குறித்த வங்கியினை மன்ராசி நகரில் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்து இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான இடத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உபதலைவரும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உப தலைவருமான சச்சிதானந்தன் பெற்றுக்கொடுத்ததாகவும் இனிவரும் காலங்களில் உணவு முத்திரை கொடுப்பனவினை தவிர அனைத்து சமூர்த்தி வங்கியுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் குறித்த வங்கியில் முன்னெடுக்கப்படும் என அக்கரபத்தனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தெரிவித்தார்.

குறித்த வங்கி திறந்து வைத்ததன் மூலம் பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி பயனாளர்கள் உட்பட பொது மக்கள் பல்வேறு நன்மைகள் அடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். வங்கியினை சமய சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவமளித்து பால் பொங்கி பூஜைகள் நடத்தி,; உத்தியோகபூர்வ வங்கி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் போது பலர் புதிய கணக்குகளையும் புத்தாண்டில் தொடங்கினர்.
சமூர்த்தி வங்கி திறப்பு விழாவில் சமூர்த்தி வங்கி உத்தியோகஸ்த்தர்கள், சமூர்த்தி தோட்ட தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உபதலைவரும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உப தலைவருமான சச்சிதானந்தன் உட்பட வர்த்தகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here