அம்பகமுவ பிரதேச சபைக்கு சொந்தமான கினிகத்தேனை பகதுலவ பிலேக்வோட்டர் தோட்டத்திற்கு செல்லும் பாதை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் வீதியில் பாரிய கற்கள் தோன்றி நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான பாதை இணைக்கும் குறித்த தோட்டத்திற்கு செல்லும் சுமார் இரண்டரை கிலோமீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதையினை இந்த பிரதேசத்தில் வாழும் சுமார் 500 மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த வீதியினூடாகவே பிளெக்வோட்டர் தமிழ் வித்தியாலயம், மத்திய மாகாண நெசவுக்கைத்தொழில் நிலையம், அலங்கார மீன் உற்பத்தி நிலையம்,பிலேக்வோட்டர் மேல் கீழ் பிரிவு போன்றன காணப்படுகின்றன.நாளாந்தம் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்,தொழில்புரியும் ஊழியர்கள் ஆகிய அனைவரும் குறித்த வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் இந்த வீதி உடைந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த வீதியினை பயன்படுத்தும் முச்சக்கரவண்டி சாரதிகள் நாளாந்த பயனிப்பதற்கு இடர்படுவதாகவும் தங்களுடைய வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆட்டோ சாரதிகள் முகம் கொடுப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீதி சீரின்மை காரணமாக கூலி வாகனங்கள் அதிக பணம் அறிவிடுவதாகவும் இதனால் சாதாரண மக்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயணிப்பதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
சிறிது மழை பெய்தாலும் வீதியில் உள்ள குழிகளில் தண்ணீர் நிறைந்து வழிவதாகவும் பிலேக்வோட்டர் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது பாதணிகளை கழற்றிக்கொண்டு பாடசாலை சென்றே மீண்டும் அணிந்து கொள்வதாகவும் இதனால் மழைக்காலங்களில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதிக மழையின் போது வீதி நீரில் மூழ்குவதனால் அடிக்கடி பாடசாலைக்கு விடுமுறை வழங்கி பரிதொரு நாளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி ஏற்படுவதாகவும் இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் அவசரத்திற்கு ஒரு நோயாளி கூட கொண்டு போக முடியாத நிலை காணப்படுவதாகவும்.இவ்வாறு ஒரு நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடையிலேயே இறந்துள்ளதாகவும் கர்பினி தாய் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது வீதியிலேயே குழந்தை பிரசுவித்துள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் வந்து குறித்த வீதியினை சீர் செய்வதாக தெரிவித்து வாக்குகளை பெற்று செலவதாகவும் அதனை தொடர்ந்து குறித்த வீதி தொடர்பாக மறந்து விடுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மலைவாஞ்ஞன்