15 வயது சிறுமி விற்பனை விவகாரத்தில் இதுவரை 26 பேர் கைது!

0
181

15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்கள் என்பதுடன், 6 பேர் சிறுமியை கடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியை இணையத்தளம் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரத்தை தயாரித்த நபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கப்பலொன்றின் தலைவர், அவரின் உதவியாளர் ஒருவர் மற்றும் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரும் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரத்து செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட 3 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பிரதேச சபை உப தலைவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி டெனி பெர்ணான்டோ, தனது சேவை பெறுநர் ஹோட்டல் அறையில் இருந்ததை ஒப்புக் கொள்வதாக குறிப்பிட்டார். எனினும் அவர் சிறுமியை சட்ட ரீதியிலான பாதுகாப்பிலிருந்து கடத்தவில்லை எனவும், அறைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியிடம் பாலியல் ரீதியில் உறவு வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு தனது சேவை பெறுநர் கடந்த இரு வருடங்களாக பாலியல் பலவீனத்துக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அது குறித்த வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே திறந்த மன்றில் நீதிவான் லோச்சனி அபேவிக்ரம பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் விடயங்களை முன்வைத்தார்.

குறித்த சிறுமி, பல்வேறு நபர்களால் பல்வேறு முறைகளில் பாலியல் நடவடிக்கைகளுக்கு மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளார். அச்சிறுமி நேற்று முன் தினம் எனது உத்தியோகபூர்வ அறையில் ஆஜர் செய்யப்பட்டபோது நான் அது தொடர்பில் ஆராய்ந்த்தாகவும், பாலியல் பலாத்காரங்களால், போஷனை இன்றி, மானசீக ரீதியிலும் உடலளவிலும் மிக மோசமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது போன்று, அச்சிறுமியை பழைய நிலைமைக்கு அழைத்து வருவதும், இந் நிலையிலிருந்து மீட்பதும் மிக முக்கியமாகும் என சுட்டிக்காட்டிய அவர், சிறுமி மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஆசைப்படுகிறார். அதனால் எதிர்வரும் சாதாரண தரப் பரீட்சையை எழுதுவதற்காக, அவர் தயார் படுத்தப்படுவதுடன் சம வயதை உடைய சிறுவர்களுடன் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

இதனிடையே, சிறுமியை விற்பனை செய்வதற்கு உதவிய மற்றுமொரு நபர் அது தொடர்பான விசாரணைகளின்போது, வேறொரு யுவதியை விற்பனை செய்வதற்காக அழைத்து சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் வௌ்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here