பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.
மேலும், கல்வித்துறையில் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதன் கீழ், ஆசிரியர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்டும்.
அதன் மூலம் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியும். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பிரகாரம், எதிர்வரும் புதன்கிழமைக்குள், உரிய உத்தரவுக் கடிதங்கள் அமைச்சுக்கு கிடைத்த பின்னர், மாகாண அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், 2700 Smart Board களை, பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான பாடசாலை வலயமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எமது திட்டமாகும். மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 400 மில்லியன் டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.