சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தேவைக்கு அதிகமாகவே சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் பாவனையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய முற்படுவதே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்குக் காரணமாவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்படி நிறுவனத்தின் தொடர்பாடல் மற்றும் வர்த்தக வலையமைப்பு அபிவிருத்தி முகாமையாளர் சமனி பதிரகே அது தொடர்பில் தெரிவிக்கையில்,
லிற்றோகேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு நிரப்புதல் மற்றும் வினியோக நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அதற்கிணங்க தேவைக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு தினங்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை தினமும் சுமார் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த விலைக்கு மேலதிகமாக சமையல் எரிவாயுவை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், அதனை முறைப்பாடு செய்வதற்காக நுகர்வோர் 1311 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.