மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனர். 200 வருடங்களாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அனைத்து வழிகளிலும் மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், கடந்த காலங்களில் வடக்குக்கு எதிராக அநீதிகளே கட்டவிழ்த்துவிடப்பட்டன. அதனால்தான் போர்கூட ஏற்பட்டது. எனினும், வடக்கை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘ இந்நாட்டில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கிலேயே சில எதிரணி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.”
எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘ இலங்கையில் வறுமையால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது. இம்மாகாணத்தை நாம் நிச்சயம் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும், வடக்கை நோக்கியே அனைத்து அநீதிகளையும் கட்டவிழ்த்துவிட்டன. வன்முறைகள் தலைவிரித்தாடின. இறுதியில் அது யுத்தமாக மாறியது. மக்கள் கொல்லப்பட்டனர். சொத்து இழப்புகள் ஏற்பட்டன.
போர் முடிவடைந்தும் வடக்கு மாகாணம் கட்டியெழுப்படவில்லை. எனினும், எமது ஆட்சியின்கீழ் வடக்கை நோக்கி அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் வடக்கு மாகாணம் நிச்சயம் கட்டியெழுப்படும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.