2026 டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி பங்கேற்பது குறித்தும், குறிப்பாக அவர்கள் இந்தியாவுக்குச் செல்வது குறித்தும் ஜனவரி 21 ஆம் திகதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
டாக்காவில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த கால அவகாசத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே வாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட விரும்புவதாகவும் ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வெளியே விளையாட வேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
இணை ஏற்பாட்டாளரான இலங்கை இதற்கு பொருத்தமான நாடாக இருக்கும் எனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் பங்களாதேஷ் ‘குழு சி’யில் (Group C) இடம்பெற்றுள்ள நிலையில் குழு பீ ற்கு அந்த அணியை மாற்றுவதற்கு ஐ.சி.சி உடன்படவில்லை என கூறப்படுகின்றது.
பெப்ரவரி 7 ஆம் திகதி உலகக் கிண்ணத்தின் தொடக்க ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
தொடக்க நாளில் கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பங்களாதேஷ் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆட்டங்களும் அங்கேயே நடைபெறும். அதைத் தொடர்ந்து அவர்களின் இறுதி குழுநிலை ஆட்டம் மும்பையில் நடைபெறும்.
பங்களாதேஷ் இந்தியாவுக்குச் செல்ல BCB அனுமதி மறுத்தால், ஐசிசி மாற்று அணியை அறிவிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய தரவரிசையின் அடிப்படையில் அது ஸ்காட்லாந்தாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது ஐபிஎல் 2026 குழாத்திலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்கியதிலிருந்து இந்த மோதல் தொடங்கியது. அந்த முடிவுக்கு எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை.
அதன்பின் பங்களாதேஷ் அரசாங்கம் நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பைத் தடை செய்தது.
அத்துடன் இந்தியாவுக்கு சென்று டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடப் போவதில்லை என்றும் பங்களாதேஷ் அணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




