பிரிட்டனைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் வான்குடை சாகசத்தில் ஈடுபட்டு புதிய உலக சாதனை புரிந்துள்ளார். சஃபோல்கில் உள்ள பென்ஹால் கிரீன் கிராமத்தைச் சேர்ந்த மானெட் பெய்லி எனும் அந்த மூதாட்டி, தனது 102வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்தச் சாகசத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று தொண்டு நிறுவனங்களுக்குப் பணம் திரட்டுவதற்காகவும் இந்தச் சாதனை முயற்சியை அவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி பெய்லி, கிட்டத்தட்ட 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து குதித்து இந்தச் சாகசத்தைப் புரிந்ததாகவும் இந்தச் சாதனை முயற்சியின் மூலம் £ 30,000 திரட்ட திட்டமிட்டிருந்ததாகவும் கிட்டத்தட்ட 14,000 பவுன்ஸ் திரட்டியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
2017ஆம் ஆண்டு மே மாதம், 101 வயது முதியவர் வெர்டுன் ஹேஸ், நிகழ்த்திய சாதனையை முறியடித்து அதிக வயதில் வான்குடை சாகத்தில் ஈடுபட்ட பிரிட்டனைச் சேர்ந்தவர் எனும் பெருமையைத் பெய்லி பெற்றார் என ‘தி கார்டியன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.