இலங்கையில் 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் போது மலையகத்திலிருந்து சுமார் 2500 பேர் செல்ல வேண்டும் ஆனால் இப்போது 700 பேர் வரை தான் பல்கலைக்கழகம் செல்கிறார்கள் ஆகவே நாங்கள் கல்வியில் முன்னேறி விட்டோம் என்று கூற முடியாது என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரும் பேராசிரியருமான ரி.தனராஜ் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 விக்னேஸ்வரா ஆரம்ப பிரிவு பாடசாலைக்கான இரண்டு மாடி புதிய கட்டிடம் இன்று வைபவ ரீதியாக பாடசாலை அதிபர் ஏ ஜெயசுந்தரம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஆரம்ப பிரிவு ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் ஒரு பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்த பாடசாலையில் கல்வி கற்று கொழும்பில் வர்த்தகராக இருக்கின்றவர்கள் இணைந்து 3 கோடியே 50 லட்சம் ரூபா செலவில் இரண்டு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
கட்டிடத்திற்கான அடிக்கல் ஆகஸ்ட் மாதம் 04 திகதி 2023 அன்று நாட்டி வைக்கப்பட்டது .ஒரு வருடத்தில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திற்கு இன்று ஒப்படைக்கப்பட்டது. இக்கட்டிட நிர்மாண குழு தலைவராக செயல்பட்ட கொழும்பு வர்த்தகரும் இப்பபாடசாலையின் பழைய மாணவரான முருகையா பிள்ளை கேசவமூர்த்தி தலைமையில் நிதி சேகரிக்கப்பட்டு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
கொழும்பில் வசிக்கின்ற அதிகமான வர்த்தகர்கள் பெருந்தொகையான சொந்த பணத்தினை பாடசாலை கட்டிட நிர்மாண பணிக்காக வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.விழாவுக்கு வருகை தந்திருந்த பிரதம அதிதிகள் பசுமலை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இருந்து மேல வாத்திய இசை முழங்க அழைத்தவரப்பட்டு மாணவர்களின் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றி விழா ஆரம்பமாகியது.
இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தது அத்தோடு இப்ப பாடசாலைக்கு நிதி உதவி வழங்கியவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தால் பொன்னாடை அணிவித்து நினைவு சின்னங்கள் வழங்கி தங்களின் கௌரவத்தை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் கிளையின் ஆணையாளர் எஸ் முரளிதரன் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் ரி தனராஜ் மத்திய மாகாண மேலதிக தமிழ் கல்வி பணிப்பாளர் ஏ ஆர் சத்தியேந்திரா நுவரெலியா கல்வி திணைக்களத்தின் நிர்வாக பணிப்பாளர் வசந்த அபேரத்தின கொடை வள்ளல்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டினும் ஆலயம் 16 ஆயிரம் நாட்டிலும் மேலானது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க மலையக மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கின்றனர் ஆகவே இந்த கட்டிடம் அமைத்திருப்பது மிகவும் உயரிய செயல் இன்று மலையகத்தை பொருத்தவரையில் பல்வேறு துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உயர் பதவிகளில் எம்மவர்கள் இருக்கின்றனர். ஆகவே நாங்கள் கல்வியில் மிக வேகமாக செல்ல வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளன என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் கிளையின் ஆணையாளர் எஸ் முரளிதரன் உட்பட பலர் கருத்து தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்