38 ஆண்டுகளுக்கு பிறகு யாழில் தீயுடன் சங்கமமான தாய், மகன்!

0
20

38 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய், மகனது உடல்கள் மீள எடுக்கப்பட்டு தகனக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கையில், கண்டி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த தாயும், அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டுவளவிலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ஏனைய பிள்ளைகளுக்கு தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு, இந்து சமயக் கிரியைகள் நடாத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here