வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்கள், ஓட்டோ சாரதி ஆகிய மூவரையும், குற்றவாளிகளாக இனங்கண்ட நுவரெலியா மேல் நீதிமன்றம் அந்த மூவருக்கும் மொத்தமாக 37 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதில், இரண்டு சம்பவங்களுக்கான தீர்ப்பு, நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் புதன்கிழமை (14) வழங்கப்பட்டது மற்றுமொரு சம்பவத்துக்கான தீர்ப்பு, ஜனவரி 31ஆம் திகதி, , நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டிருந்த கொட்டக்கலை பகுதியை சேர்ந்த (43) வயதுடைய பாடசாலை ஆசிரியரை 2 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு 17 வருட கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. முதலாவது குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும். தண்டப் பணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை செலுத்தாவிட்டால் 3 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இது இவ்வாறிருக்க வலப்பனை பகுதியை சேர்ந்த ஓட்டோ சாரதியான 35 வயதான நபர், தனது உறவுக்கார பிள்ளையான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இவருக்கு எதிராக நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் 2013 ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கிய நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு 07 லட்சம் ரூபாய் நட்ட ஈட்டு வழங்க வேண்டும். 25 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்த வேண்டும். இவைகளை செலுத்தாத பட்சத்தில் மேலும் 06 மாதகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் , தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியருக்கு கடந்த ஜனவரி மாதம் (31)ஆம் திகதி 15 வருட கடூழிய சிறை தண்டனையை நுவரெலியா மேல் நீதி மன்ற நீதிபதி வழக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.