இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ.177 கோடி வசூலித்த இந்தப் படம், 12 நாட்களில் ரூ.266 கோடி வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ. 300 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள். உலகம் முழுவதும் இந்தப் படம் இதுவரை ரூ.404 கோடியை வசூலித்துள்ளது. 1
இந்த வருடம் வெளியான பாலிவுட் படங்களில் விக்கி கவுஷல் நடித்த ‘ஜாவா’ ரூ.601 கோடியை இந்தியாவில் வசூலித்தது. இதற்கடுத்தப் படியாக ‘சையரா’ படம் அதிகம் வசூலித்து வருகிறது. அறிமுக ஹீரோ ஒருவரின் படம் இப்படி வசூல் குவித்து வருவது, பாலிவுட் தயாரிப்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.