50 நாட்களுக்குள் முடிவு வர வேண்டும்!

0
6

உக்ரைனுக்கு எதிரான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவை அவரது ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“50 நாட்களுக்குள் நாம் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அவர்கள் மீது மிக மிகக் கடுமையான வரிகளை விதிக்கப் போகிறோம். நான் பல விடயங்களுக்கு வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறேன். போர்களைத் தீர்ப்பதற்கு இது சிறந்தது” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அடிக்கடி புடினுடனான தனது நட்புறவைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார். உக்ரைனை விட ரஷ்யா அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கு அதிக விருப்பம் கொண்டுள்ளது என்று அவர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி போரை நீட்டிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இப்போது, ரஷ்ய ஜனாதிதி மீது தான் ஏமாற்றமடைந்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவின் தாக்குதலை அதிகரித்ததால் டிரம்ப் கோபமடைந்தார். பின்னர் டிரம்ப் உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை அனுப்புவதாக அறிவித்தார்.

பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு அனுப்புவதாகக் கூறினார். புடின் அவர் நன்றாகப் பேசுவதாகவும் ஆனால் மாலையில் அனைவரையும் தாக்குவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, ஆயுதங்களை அனுப்புவதை உக்ரைன் வரவேற்றுள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதியின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here