மத்திய மாகாண கொவிட் தடுப்பு குழுக் கூட்டம் மத்திய மாகாண ஆளுநர் கௌரவலலித் யூ கமகே அவர்களின் தலைமையில் ஆளுனர் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது .
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் மும்முரமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் மேலும் 500,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் மற்றும் எனது கோரிக்கைக்கும் அமைவாக உடபலாத்த, பன்வில ஆகிய வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இத்தடுப்பூசி வழங்களின் போது பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டது. இதன் விளைவாக பன்வில, கம்பளை. புஸ்ஸலாவ பகுதிகளை உள்ளடக்கிய உடபலாத்த மற்றும் பன்விளை (MOH) மருத்துவ அதிகாரி பிரிவுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம் எட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமாகிய பாரத் அருள்சாமி அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்…
மேலும் 500,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு எதிர்வரும் 15 ம் திகதிக்கு மேல் கிடைக்கவுள்ளது. எனவே 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க இக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில் இதுவரையிலும் 762 கொவிட் மரணங்கள் மத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 498 மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் சுட்டி காட்டுகின்றது.
இதுவரையில் 214,680 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒருலட்சத்து பதினான்காயிரத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே எமது கோரிக்கைக்கு அமைவாக பெருந்தோட்டத்துறையினை உள்ளடக்கிய அனைத்து பிரதேசங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம்.
அதேபோல நுரரெலியா மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்ற இத்தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரயுைம் பங்குபற்றச் செய்ய இளைஞர்கள் முன்வந்து உதவவேண்டும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். அதே சந்தர்ப்பத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வயது அடிப்படையின்றி இத்தடுப்பூசி வழங்கவேண்டும் என நாம் விசேடமாக ஒரு கோரிக்கையை விடுத்திருந்தோம்.
இதுவும் எதிர்வரும் 15 ம் திகதிக்குப் பின் கண்டி மாவட்டத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் இங்குள்ள சட்டத்தரணிகளுக்கும் வழக்கறிஞர் கழகம் ஊடாக தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் பாரத் அருள்சாமி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் .