9 வருடங்களின் பின்னர் மின் கட்டண திருத்தம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.மின்சார கட்டணம் 60 முதல் 90 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக 2014ல் மின்கட்டண திருத்தம் செய்யப்பட்டது, அதில் மின் கட்டணம் சுமார் 25 சதவீதம் குறைக்கப்பட்டது.
நிலக்கரி, எரிபொருள் எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை பாரிய அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக இம்முறை கட்டணத்தை 229 வீதத்தால் அதிகரிக்குமாறு மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வருடாந்த வருமானம் 500 பில்லியனில் இருந்து 800 பில்லியனாக அதிகரிக்க வேண்டும் என்பதே மின்சார சபையின் எதிர்பார்ப்பு.
229 சதவீத முன்மொழிவுக்குப் பதிலாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 60 சதவீத விகித அதிகரிப்பை முன்மொழிந்ததுடன், மக்களிடம் எழுத்து மற்றும் வாய்மொழி விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
எவ்வாறாயினும், அதிகரித்த மின்சாரக் கட்டணத்தினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 65 பில்லியன் ரூபாவை கோரிய போதிலும் திறைசேரி அதனை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடம் சுமார் 80 பில்லியன் ரூபா மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று பிற்பகல் இறுதி கட்டண திருத்தத்தை அறிவிக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், டொலர் நெருக்கடியுடன் இலங்கைக்குள் உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக புதிய மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை வழங்குவது தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் புதிய இணைப்புகளை வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.