அவுஸ்திரேலியாவில் 64 வயதான் பெண்ணின் மூளைக்குள் ஒட்டுண்ணிப் புழு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து நிமோனியா, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, மனச்சோர்வு, நினைவாற்றல் குறைபாடு ஆகிய நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எனினும் நோய்களுக்கான எவ்வித நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை.இதனையடுத்து கடந்த ஆண்டு கான்பெராவிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையின் போது, 8 சென்றி மீட்டர் நீளமுள்ள வெளிர் சிவப்பு புழு இருப்பது தெரியவந்துள்ளது.இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது மூளையிலுள்ள புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
இந்த புழு Ophidascaris Robertsi என அழைக்கப்படும் பாம்பு வகையை சேர்ந்ததாகும்.இவ்வகை புழுக்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
இந்த பெண்ணின் வாழ்க்கை முறைக்கோ, தொழிலுக்கோ பாம்புகளோடு எந்த தொடர்பும் இல்லையென்றாலும், அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள ஏரியில் பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன.
அங்கிருந்து பெறப்பட்ட கீரைகளில் அந்த புழுவின் முட்டைகள் இருந்து அவர் அதனை உண்ணும்போது உள்ளே சென்று, புழுவாக உயிர் பெற்று, இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சென்று, அங்கேயே உண்டு அதன் மூலம் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.
உலகில் இப்படியான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் முறை என மருத்துவதுறை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.