” மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின்கீழ் இயங்கும் நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள 700 ஏக்கர் காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் துணைநிற்கின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (30.08.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டப்பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால்தான் அங்குள்ள தரிசு நிலங்கள்கூட எமது மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றோம். ஆனால் இன்று மிகவும் சூட்சுமமான முறையில் தோட்டக் காணிகள் தனியார் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.
இதன் மற்றுமொரு அங்கமாக கண்டி மற்றும் கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள 700 ஏக்கர் காணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இம்முயற்சிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் துணைநிற்கின்றமை வெட்கித்தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
நாகஸ்தன்ன தோட்ட மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. வெளியார் உற்பத்தி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலைமை நீடித்திருந்தால் காலப்போக்கில் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி இருக்கலாம்.
எனினும், மக்களிடமிருந்து பலவந்தமாக காணிகள் பறிக்கப்பட்டு தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இது பெருந்தோட்டத்துறைக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல துரோகத்துக்கு துணை நிற்கும் இ.தொ.காவும், மக்கள் குறித்து சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.” என்றார்.