உதாகம்மான தனி வீட்டு திட்டங்களை நடுவழியில் கைவிட்டு அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

“உதாகம்மான தனி வீட்டு திட்டங்களை நடுவழியில் கைவிட்டு அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

“கடந்த நல்லாட்சியில் தேசிய வீடமைப்பு அமைச்சராக தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் செயற்பட்டார். அதன் போது, நகர, கிராம மக்களுக்கு பல வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தோட்ட மக்களுக்கான வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. நாம் தொடர்ச்சியாக நகர, கிராம வீடமைப்புக்கு ஒத்ததாக தேசிய வீடமைப்பு அமைச்சின் ஊடாகவும், தோட்ட பகுதிகளில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தோம். அதன் படி, 2018/19 ஆம் ஆண்டுகளில் தோட்ட பகுதிகளிலும் உதாகம்மான வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. 2019 ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது, அவை அவற்றின் முதலாம், இரண்டாம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, இறுதி வேலைகள் எஞ்சிய நிலையில் இருந்தது. தற்போது இவ் உதாகம்மான தனி வீட்டு திட்டங்களை நடுவழியில் கைவிட்டு அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

கண்டி மாவட்டத்தின் ஹந்தானை, லெவலன்ட், கெலாபொக்க, ரங்களை மற்றும் வைத்தலாவ தோட்டங்களில் இத்தனி வீடுகள் கட்டப்பட்டுவந்தன. இவற்றில் மொத்தமாக 565 வீடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் பயனாளிக்கு ரூபா 500,000 தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நன்கொடையாக வழங்கப்படும். அதன் படி, இக்கொடுப்பனவு பல கட்டங்களாக பகிர்ந்து வழங்கப்படுவதே நடைமுறையாகும். மொத்தமாக பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த நிதி ரூபா 282 மில்லியன் ஆகும். அதிலே நல்லாட்சி காலத்தில், முதலாம் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகளாக 60% க்கு அதிகமான தொகை பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் இருந்து இன்று வரை எஞ்சிய தொகையில் ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இவ்வனைத்து வீடுகளும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இவை எவ்வித பிரயோசனமும் அற்ற நிலைக்கு தள்ளப்படும். எனினும் இது தொடர்பாக அரசாங்கத்திற்கோ, அரசாங்கத்தில் உள்ள எமது பிரதிநிதிகளுக்கோ, எவ்வித அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.

அரசாங்கம் எதுவாக இருந்தாலும் ஆரம்பிக்கப்பட்ட வேலை திட்டங்களை பூரணப்படுத்த, பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்க வேண்டும். மாறாக இன்றைய அரசாங்கம் அவற்றை கைவிட்டு, புதிய வேலைத்திட்டங்களை தொடங்குவதாக குறிப்பிடுகின்றது. இவ் வேலை திட்டம் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாலேயே இவ்வாறு செய்ய முற்படுகின்றனர். இவ்வாறான அரசியல் பலிவாங்கலை கைவிட்டு, அப்பாவி தோட்ட மக்களினது வீடுகளை பூரணப்படுத்த அவசியமான கொடுப்பனவினை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு, நாம் தான் ஆளும் தரப்பு என மார்தட்டிக்கொண்டவர்கள் வழிசமைக்க வேண்டும். அதனை விட்டு அரசாங்கத்தோடு சேர்த்து, பித்தலாட்டம் ஆடி, மக்களை ஏமாற்ற வேண்டாம் என கூறி வைக்க விரும்புகின்றேன்.” என மேலும் குறிப்பிட்டார்.