ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெறுவதற்காக தொழிலாளர்களின் வேலை அளவை அதிகரிக்க முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளரும் நோர்வுட் பிரதேசசபையின் உறுப்பினருமான ப.கல்யாணகுமார் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவை பணிமனையில் இடம்பெற்ற தோட்டத் தலைவர்களுக்கான கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட பொகவந்தலாவ பிரதேச தோட்டங்களில் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பனவற்றின் தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவை அமைப்பாளர் செல்வராஜ், கெம்பியன் அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட தலைவர் ரகு , பணிமனை உத்தியோகஸ்தர் முத்துக்குமார் உட்பட தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கல்யாணகுமார் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
தற்போது நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஏற்ற சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாவை கருதமுடியாது. பத்து வருடங்களுக்கு முன்பே தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் தற்போது இந்த 1000 ரூபாய் சம்பளத்தை பெறுவதற்கு தோட்டத் தொழிலாளர்களின் வேலை அளவை அதிகரிப்பதற்கு தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.
இதற்கு தொழிலாளர்கள் உடன் பட போவதில்லை. இதற்கு மாறாக தோட்ட நிர்வாகங்கள் செயற்படும் பட்சத்தில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். எனவே இதனை உணர்ந்து பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனி செயற்படவேண்டும்.